×

பெற்றோரை புறக்கணிக்காதீர்கள்

மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்கு போதும். அவனுக்காக வாழப் போகிறேன். இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.

வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும் வியாபாரத்தையும் மகனிடம் எழுதிக்கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.

ஒரு வருடம் போனது… ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண, மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார். மருமகளோ, வெண்ணெய் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டாள். மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்.

மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணெய் கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல், மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான். அந்த வெண்ணெயை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக் கொண்டு இருந்தது. மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான். அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான். ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க, நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடிபோகிறோம். என் பெயரில் எழுதிய அனைத்தையும், உங்கள் பெயருக்கே மாற்றிக்கொள்ளுங்கள். இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாடமாட்டேன். மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன் என்றான்.

“ஏன் இந்த திடீர் முடிவு?’’ என்று தந்தை கேட்க, ‘‘இல்லை அப்பா.. உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. சாதாரண வெணெய்க்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது. ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள்’’ என்றான்.

இறைமக்களே, பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ஏ.டி.எம். கார்டாக இருக்கலாம், ஆனால் பிள்ளைகள் என்றும் ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப் பொருள். ‘‘உங்களுக்கு என்ன தெரியும். நீங்கள் அக்காலத்தவர்கள். இது 21 நூற்றாண்டு’’ என சொல்லி பெற்றோரின் வாயை சட்டென அடைத்துவிடும் த்தலைமுறை பிள்ளைகளே, உங்களை பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். காரணம், அவர்கள் இன்றி உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.

‘‘உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவி கொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’’ (நீதி.23:22) என திருமறை கூறுகிறது. ஆம், தேவன் கொடுத்த பத்துக் கட்டளைகளிலும் வாக்குத்தத்தத்தோடு கூடிய கட்டளையாக ‘‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’’ (யாத்.20:12) என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அப்படியானால், உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது என்பது,கடவுளின் வார்த்தையையே புறக்கணிப்பது ஆகும்.

தொகுப்பு: அருள்முனைவர். பெவிஸ்டன்.

The post பெற்றோரை புறக்கணிக்காதீர்கள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!